icon

Winner SAIRENU SHANKAR

  • வகை:சந்தப்பாடல்
  • பரிசு:பணம்
  • பிராந்தியம்:இந்தியா
  • தகுதி:அனைவருக்குமான போட்டி
பாடல்/சந்தம்:

தனன தனநன்ன  நன்னன்  

தனன தனநன்ன  நன்னன்

 

தனன நாநன்ன நானா  

தனன நாநன்ன நானா

தனன நாநன்ன நானா

தானன நாநன்ன நானா

 

தனன தனநன்ன  நன்னன்  

தனன தனநன்ன  நன்னன்

 

தனன நாநன்ன நானா  

தனன நாநன்ன நானா

தனன நாநன்ன நானா

தானன நாநன்ன நானா

 

SAIRENU SHANKAR எழுதிய வரிகள்:

பல்லவி

சிறகு விரிகின்ற அன்னம்
உறவு அறிகின்ற உள்ளம்

சரணம்

என்னில் தோய்கின்ற தேனா
எங்கும் நீள்கின்ற வானா
சொந்த மாகின்ற சீரோ
சுற்றம் நீயின்றி யாரோ

பல்லவி

பரந்து தெரிகின்ற முன்றில்
பறவை திரிந்திடும் அன்பில்

சரணம்

கன்னல் நீரின்சிற் றோடை
கலைக ளாடும்நல் மேடை
என்னை ஆள்கின்ற பாவை
என்னில் வாழ்கின்ற பூவை



வெற்றியாளர் SAIRENU SHANKAR என்ன கூறுகிறார்

வணக்கம்.


அமுதத் தமிழில் அமிழ்ந்தேன் - எந்தன்

அன்னை உன்னால் வளர்ந்தேன்

அழகே உன்னை அடிபணிந்தே நான்

அகிலந்தன்னில் உயர்ந்தேன்.


ஒருசரணம் என்ற இந்த உன்னதத் தளத்தைப் பற்றிக் கூறுவதற்குமுன், அடியேனைப் பற்றிய சிறு அறிமுகம் அவசியமாகிறது.


நான் ரேணுகா. தமிழ் பிறந்த பொதிகை மலைச் சாரலில் உள்ளதாம் தென்காசி நகரின் தென்றல் தாலாட்ட வளர்ந்தவள். தற்போது நெல்லையில் வசிக்கும் பொறியியல் பட்டதாரி. சாய்ரேணு என்ற பெயரில் ஆன்மீக கட்டுரைகளும் துப்பறியும் நாவல்களும் எழுதி வருகிறேன். ஆனால் இலக்கிய உலகில் என்னை முதன்முதலில் தாலாட்டி வளர்த்தது கவிதைதான்.


ஏழு வயதில் என் முதல் கவிதை தோன்றியது. பள்ளி, கல்லூரிகளில் பல கவியரங்கங்களில் கலந்துகொண்டிருக்கிறேன். இசைக்கு இசைவாகக் கவியெழுத மிகவும் பிரியம். தற்போது ஸ்ரீமத் பகவத்கீதையைத் தமிழ்ப் பாக்களாக எழுதி வருகிறேன்.


ஒருநாள் ஓய்வாக முகநூலில் திரிந்து கொண்டிருந்தபோது, ஓரிடத்தில் நில்லாது ஓயாமல் அலைந்து கொண்டிருந்த என் விரல், ஒரு பக்கத்தில் அப்படியே நின்றுவிட்டது.


ஆம். 'நீங்கள் எழுத்தாளரா? சந்தத்துடன் கவிபாட வல்லவரா?" என்று அந்த முகநூல் பக்கம் என்னிடம் கேட்டது. ஆம், ஆம் என்று ஆர்ப்பரித்தது ஆர்வங்கொண்ட மனது. உடனே அந்த வலைத் தளத்திற்கு ஓடினேன்.


அதுதான் 'ஒரு சரணம்' என்ற அற்புதமான வலைத்தளம். அது தமிழுக்கு ஒரு தளம் மட்டுமல்ல, தமிழ்க்கவிகளுக்கான வெற்றி வாசல். நம் கவித் திறனைத் தூண்டக் கூடிய அருமையான போட்டிகளை நடத்துகிறார்கள் இவர்கள்.


அவர்கள் நடத்திய சந்தக் கவிப் போட்டி ஒன்றில் பங்குகொண்டேன். அழகு சொட்டும் சந்தத்தை, அதே நேரம் சிந்தனையைத் தூண்டும் சவாலான ஒலியமைப்புடன் கூடியதை வழங்கியிருந்தார்கள். அதற்குக் கவியெழுத முனைந்தேன்.


நான் எப்போது தமிழை எழுதினேன்? தமிழல்லவா என்னை எழுதுகிறது? என்னைக் கொண்டொரு தமிழ்க் கவியைத் தமிழ் தானே எழுதிக் கொண்டது.


சிறிது நாட்கள் கழிந்தது. ஒரு சரணம் தளத்திலிருந்து ஒரு மெயில் என் உள்பெட்டிக் கதவைத் தட்டியது. எனக்கு அந்தச் சந்தக் கவிப் போட்டியில் முதல் பரிசு கிடைத்திருப்பதாக அது அறிவித்தது.


நான் அடைந்த ஆனந்தத்திற்கு எல்லையே இல்லை. உள்ளுணர்வு தூண்டியே கவிஞன் எழுதுகிறான், அவன் தன்னானந்தமே அவன் பெறும் பெரும் பயன் என்றாலும் நம் கவி அங்கீகரிக்கப்படும்போது கிடைக்கும் மகிழ்வு மாணப் பெரிது.


நம் கவிக்குப் பரிசாகவும் புகழாகவும் ஒரு சரணம் இரட்டைச் சால்வை போர்த்துகிறது. அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் உரித்தாகுக. இக்குழு தமிழுக்கு ஆற்றும் தொண்டால் தரணி வெல்க என்று அகமார வாழ்த்துகிறேன்.


தமிழுக்கு நன்றி தாய்மண்ணிற்கு நன்றி

தளந்தந்து ஆதரிக்கும் குழுவிற்கு வெகுநன்றி

எமைக்காக்கும் இறைவர்க்கு என்றுமே என்நன்றி

எண்ணத்தில் உயர்வுதரும் கவிதைக்கும் நிறைநன்றி!


ரா. ரேணுகா (சாய்ரேணு)