தமிழ்க் கவிதைகள் யாப்பிலக்கணத்தை அடிப்படையாகக் கொண்டவை. யாப்பிலக்கணம் அசை, சீர், தளை, அடி, தொடை, ஆகிய பாடல் உறுப்புகள் பற்றிக் கூறுகின்றது. எழுத்துக்களால் ஆனது அசை, அசைகளால் ஆனது சீர், சீர்களால் ஆனது அடி. 12 உயிரெழுத்துக்களும் 18 மெய்யெழுத்துக்களும் இவை ஒன்றுடன் ஒன்று சேர 216 உயிர் மெய் எழுத்துக்கள், அதோடு ஓர் ஆயுத எழுத்தும் ஆக மொத்தம் 247 எழுத்துக்களைக் கொண்டது தமிழ் மொழி. குறில், நெடில், ஒற்று என்பதன் அடிப்படையில் அசை, நேரசை மற்றும் நிரையசையாகப் பகுக்கப்படுகிறது. ஓசை தழுவி வருவதே பாட்டு. அசைகள் இணைந்து உருவாக்கும் சீருக்கு வாய்பாடும், சீர்கள் புணர்வதற்குத் தளை வகைகளும் கண்டனர் யாப்பிலக்கணத்தார்.
இருசீர் கொண்டது குறளடி, மூன்று சீர்கள் கொண்டது சிந்தடி, நான்கு சீர்கள் கொண்டது நேரடி, ஐந்து சீர்கள் கொண்டது நெடிலடி. சீர், தளை, அடி ஆகியவற்றின் வேறுபாட்டால் பா வகைகள் அமைகின்றன. முக்கியமான பா வகைகள் நான்கு. அவை வெண்பா, அகவற்பா, கலிப்பா மற்றும் வஞ்சிப்பா.
பாக்கள் அவைகளுக்கு உரிய இலக்கணத்துக்கும் ஓசைக்கும் உட்பட்டவை. பாடலின் ஓசைக்கு இன்றியமையாதது அசை, தளை மற்றும் தொடை. எழுத்து, சொல், பொருள் கொண்டு இலக்கண வரையறைக்கு உட்பட்டுப் பாடல் தொகுக்கப்படுகிறது. அப்படித் தொகுக்கப்படும் பாடலுக்குச் சுவை ஊட்டுவது தொடை. சீர்களின் முதலெழுத்து ஒற்றுமை மோனை என்றும், இரண்டாம் எழுத்து ஒற்றுமை எதுகை என்றும், இறுதியில் அமையும் ஒலி ஒற்றுமை இயைபு என்றும், சொல் பொருள் ஆகியவற்றில் காணும் முரண்பாடு முரண் என்றும், ஓர் அடியின் கடைசி எழுத்தோ அசையோ சீரோ அடுத்த அடியின் முதலாக அமைவது அந்தாதி என்றும், தொடைகள் பல வகைப்படும்.
Copyright © 2024 R and R Consultant
Total Hits:267205