கவி காளமேகம்(இயற்பெயர் வரதராஜன்) 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர். மேகம் மழை பொழிவதுபோல் இவர் கவி மழை பொழிந்ததால் இவர் பெயர் காளமேகம் ஆயிற்று. வைணவ சமயத்தில் பிறந்த இவர், திருவானைக்காகோவிலைச் சேர்ந்த மோகனாங்கி என்பவரை மணமுடிக்கச் சைவ சமயத்துக்கு மாறினார். இவர் பாடிய சிலேடைப் பாடல்களும், நகைச் சுவைப் பாடல்களும் சிறப்பானவை. இவர் ஒரு ஆசுகவி ஆவார்.
(கொடுத்த பொருளில் தொடுத்த இன்பத்தில் அடுத்த பொழுதில் பாடுவது ஆசுகவி). ‘ஆசுகவியால் அகில உலகெங்கும் வீசு புகழ் காளமேகம்' எனப் பெயர்பெற்றவர்.
காளமேகப் புலவர் பலசமயங்களில் இயற்றிப் பாடிய தனிப்பாடல்கள் ‘தனிப்பாடல் திரட்டு’ என்ற பெயரில் தொகுக்கப்பட்டுள்ளன. திருவானைக்கா உலா, சரஸ்வதி மாலை, பரப்பிரம்ம விளக்கம், சித்திர மடல் ஆகிய நூல்களையும் இவர் இயற்றியுள்ளார்.
எல்லோர்க்குமாறுதலை என்று கவி காளமேகம் பாடிய பாடல் பிரசித்தி பெற்றது:
சங்கரர்க்கு மாறுதலை சண்முகர்க்கு மாறுதலை
ஐங்கரர்க்கு மாறுதலை யானதே – சங்கைப்
பிடித்தோர்க்கு மாறுதலை பித்தா நின்பாதம்
பிடித்தோர்க்கு மாறுதலை பார்.
சங்கரர்க்கு மாறுதலை - சிவபெருமான் தலையில் கங்கை ஆறு,
சண்முகர்க்கு மாறுதலை - முருகனுக்கு ஆறு தலைகள் உள்ளன,
ஐங்கரர்க்கு மாறுதலை யானதே - பிள்ளையார்க்கு மாறுபட்ட யானைத் தலை உள்ளது,
சங்கைப் பிடித்தோர்க்கு மாறுதலை - திருமாலுக்கும் பத்துப் பிறவிகளிலும் மாறுபட்ட தலை இருந்தது,
பித்தா - சிவனே,
நின்பாதம் பிடித்தோர்க்கு மாறுதலை பார் - உன் திருவடிகளைப் பற்றிய அடியவர்களுக்கும் ஆறுதல் இருப்பதை நீயே பார்
வர்க்க பாடல் பாடுவதிலும் இவர் வல்லவர்.தகர வரிசையில் உள்ள வார்த்தைகளைக் கொண்டு இவர் பாடிய பாடல்
தாதி தூதோ தீது, தத்தை தூது ஓதாது
தாதிதூது ஒத்தித்த தூதது - தாதுஒத்த
துத்தி தத்தாதே துதித்ததே தொத்தீது
தித்தது ஓதித் திதி.
தாதி: பணிப்பெண், தூதோ: மூலமாக அனுப்புகின்ற தூது,
தீது: நன்மை பயக்காது! தத்தை: (நான் வளர்க்கும்) கிளியோ,
தூது: தூதுப் பணியில் தூதை, ஓதாது: (சொன்னபடி) ஓதாது!
தூதி தூது: தோழியின் தூதோ, ஒத்தித்த தூததே: நாளைக் கடத்திக் கொண்டே போகும்.
தாதொத்த: (ஆகவே) பூந்தாதினைப் போன்ற,
துத்தி: தேமல்கள், தத்தாதே: என் மேல் படராது, தேதுதித்த: தெய்வத்தை வழிபட்டுத்
தொத்து: தொடர்தலும், தீது: தீதாகும்
தித்தித்தது: தித்திப்பு நல்கும் என் காதலனின் பெயரை,
ஓதித் திதி: ஓதிக் கொண்டிருப்பேனாக!
பாம்புக்கும் எள்ளுக்கும் ஆனா சிலேடைப் பாடல்:
ஆடிக் குடத்தடையும் ஆடும்போ தேயிரையும்
மூடித் திறக்கின் முகங்காட்டும் – ஓடிமண்டை
பற்றின் பரபரெனும் பாரிற்பிண் ணாக்குமுண்டாம்
உற்றிடுபாம் பெள்ளெனவே யோது .
பாம்பு படமெடுத்து ஆடிய பின்னர் பாம்பாட்டியின் குடத்தில் அடைந்துகொள்ளும். படமெடுத்து ஆடும்போதே இரையும். பாம்புப்பெட்டியின் மூடியைத் திறந்தால் பாம்பு தன் முகத்தைக் காட்டும். விஷம் தலைக்கேறினால் தலை சுற்றி எரியும். அதற்கு நாக்கு பிளவுபட்டது.
எள்ளானது செக்கில் ஆடி எண்ணெயாகக் குடத்தை அடையும். செக்கில் ஆட்டப்படும்போது இரைச்சல் கேட்கும். எண்ணெய்க் குடத்தின் மூடியைத் திறந்தால் நம் முகத்தை காணலாம். நம் தலையில் பரபர என்று தேய்க்கப்படும். எண்ணெய் பிண்ணாக்கில் இருந்து எடுக்கப்படுவது.
திருமலைராயன் அவையிலிருந்த சில கவிராயர்களை ஏளனமாகச்ப் பாடியது:
வாலெங்கே நீண்ட வயிறெங்கே முன்னிரண்டு
காலெங்கே உட்குழிந்த கண்ணெங்கே-சாலப்
புவிராயர் போற்றும் புலவீரகா ணீவிர்
கவிராயர் என்றிருந்தக் கால்.
நாடாள்வோர் மிகுதியாகப் போற்றுகின்ற புலவர்களே! நீங்கள் குரங்குத் (கவி- குரங்கு) தலைவர்களாக இருக்கிறீர்கள், உங்களுடைய வால் எங்கே, நீண்ட வயிறுகள்எங்கே, குரங்குக்கு முன் பாகத்தே இருக்கவேண்டிய இரண்டு கால்களும் எங்கே, உள்ளே குழிந்திருக்கும் கண்கள் எங்கே.
நீறாவாய், நெருப்பாவாய், கூறாவாய், கொளுத்துவாய், நட்டமாவாய், நஞ்சாவாய் என்று சிவனைப் பாடச் சொன்னபோது:
நீறாவாய் நெற்றி நெருப்பாவாய் அங்கமிரு
கூறாவாய் மேனி கொளுத்துவாய்-மாறாத
நட்டமா வாய்சோறு நஞ்சாவாய் நாயேனை
இட்டமாய்க் காப்பா யினி.
திருநீற்றினை உடையைவன், நெற்றியில் ஒளிக் கண், உடம்பு இருகூறு, மேனி எரியும் நெருப்பு, பொழுதெல்லாம் நடமிடுவாய், நஞ்சினை உண்டவன், இனி, நாயினேனை விருப்பமுடன் காத்தருள்வாயாக.
கொட்டை பாக்கு என்று தொடங்கி களிப்பாக்கு என முடியும் பாடல்:
கொட்டைப்பாக் கும்மொருகண் கூடையைப்பாக் கும்மடியில்
பிட்டைப்பாக் கும்பாகம் பெண்பார்க்கும் -முட்ட நெஞ்சே
ஆரணனும் நாரணனும் ஆதிமறை யுந்தேடும்
காரணனைக் கண்டுகளிப் பாக்கு.
மதுரையில் மண்சுமக்க வந்த போது மண்சுமக்க சும்மாட்டைப் பார்த்தோனும், ஒரு கண்ணினாலே கூடையைப் பார்த்தோனும், மடியிலுள்ள பிட்டினை பார்த்தோனும், தன் இடப்பாகத்துள்ள உமையைப் பார்த்தோனும், பிரமனும் திருமாலும் ஆதிப்பழமறையும் தேடிக் கொண்டிருக்கும், சர்வ காரணனாகிய பரமசிவனை, முழு நெஞ்சே தரிசித்து களித்திருப்பாயாக.
பன்னிரு ராசிகளையும் வைத்துப் பாடிய பாடல்:
பகருங்கால் மேடம் இடபம்மிது னங்கர்க்க
டகஞ்சிங் கங்கன்னி துலாம்விர்ச்-சிகந்த
நுசுமகரங் கும்பம் மீனம்பன் னிரண்டும்
வசையறுமி ராசி வளம்.
ஆடரோ ஆரூர் தியாகராஜர்:
ஆடாரோ பின்னையவ ரன்பரெல்லாம் பார்த்திருக்க
நீடாரூர் வீதியிலே நின்றுதான்-தோடாரும்
மெய்க்கே பரிமளங்கள் வீசும் தியாகேசர்
கைக்கே பணமிருந்தக் கால்.
பணம் என்பது பாம்பின் படம் என்ற பொருளில் வருகிறது.
நாகப்பட்டினத்திலே சத்திரம் ஒன்றில் சாப்பாடு செய்து பரிமாற வெகு நேரமானதைக் கேலிசெய்து பாடிய பாடல்:
கத்துக்கடல் சூழ்நாகைக் காத்தான்தன் சத்திரத்தில்
அத்தமிக்கும் போதி லரிசிவரும்-குத்தி
உலையிலிட வூரடங்கு மோரகப்பை யன்னம்
இலையிலிட வெள்ளி எழும்.
அத்தமிக்கும் பொது - சூரியன் மறையும்போது;
மோர்விற்கும் ஒருத்தியிடம் வாங்கிக்குடித்த மோரிலே நீர் மிகவும் அதிகமாகவே கலக்கப்பட்டிருந்ததை உணர்ந்த காளமேகப் புலவர் மோரிலே நீரைக்கலந்ததுபோலன்றி, நீரிலே மோரைக்கலந்ததுபோல அவருக்குத் தோன்றப் பாடிய பாடல்:.
கார் என்று போர்படைத்தாய் ககனத் துறும்போது
நீரென்று பேர்படைத்தாய் நீள்தரையில் வந்ததற்பின்
வாரொன்று மென்முலையாராய்ச்சியர்கை வந்ததற்பின்
மோரென்று பேர் படைத்தாய் முப்பெரும் பெற்றாயே.
வானத்தை அடையும்போது கார் என்று உனக்குப் பெயர். மழையாகப் பெய்து பூமிக்கு வந்தபின்னர் நீர் என்பது உனது பெயர். மார்புக்கச்சையணிந்த மென்மையான தனங்களையுடைய ஆய்ச்சியர்களின் கைகளிலே வந்த பின்னர் உனக்கு மோர் என்று பெயர். ஆகமொத்தம் மூன்று பெயர்கள் உனக்கு இருக்கிறதே என்று அந்த மோரைப் பார்த்துப் பாடியிருக்கிறார்.
Copyright © 2024 R and R Consultant
Total Hits:267176