அந்தக் காலத்தில் பெண் புலவர்கள் அனைவரையுமே ஒளவையார் என்றே அழைத்ததாகத் தெரிகிறது. குறைந்ததாக மூன்று ஒளவையார் இருந்ததாகக் கணிக்கப்படுகிறது. சங்கப் பாடல்கள் மற்றும் தனிப் பாடல்கள் பாடியது ஒரு ஒளவையார் என்றும், நீதிநூல்கள் (நல்வழி, மூதுரை, ஆத்திசூடி, கொன்றைவேந்தன்) பாடியதோர் ஒளவையார் என்றும், விநாயகர் அகவல், ஒளவை குறள் பாடியதோர் ஒளவையார் என்றும் கூறப்படுகிறது. அவ்வையார் வாழ்ந்த காலங்கள் கி.பி 2, கி.பி 12 மற்றும் கி.பி 16ம் நூற்றாண்டு.
ஒளவையார் அதியமான், தொண்டைமான், நாஞ்சில் வள்ளுவன், சேரமான் மாரிவெண்கோ, பாண்டியன் கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி, சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, அதியமான் மகன் பொகுட்டெழினி என்னும் பல அரசர்களைப் பற்றியும் பாடியுள்ளார்.
நீண்ட நாள் வாழும் அதிசய நெல்லிக்கனியை தனக்குக் கொடுத்த அதியமானைப் பற்றிப் பாடிய புறநானூற்றுப் பாடல்:
வலம்படு வாய்வாள் ஏந்தி ஒன்னார்
களம்படக் கடந்த கழல்தொடித் தடக்கை
ஆர்கலி நறவின் அதியர் கோமான்
போரடு திருவிற் பொலந்தார் அஞ்சி
பால்புரை பிறைநுதல் பொலிந்த சென்னி
நீல மணிமிடற்றொருவன் போல்
மன்னுக பெரும நீயே தொன்னிலைப்
பெருமலை விடரகத் தருமிசைக் கொண்ட
சிறியிலை நெல்லித் திங்கனி குறியாது
ஆதல் நின்னகத் தடக்கிச்
சாதல் நீங்க எமக்கு ஈத்தனையே
வலம்படு = வெற்றி உண்டாக, ஒன்னார் = பகைவர்கள், நறவு = மது, சுழல் = வீரக்காப்பு, தொடி = வீரவளை, ஆர்கலி = மகிழ்ச்சி, பொலந்தார் = பொன்மாலை, புரை = போல, சென்னி = தலை, நீலமணிமிடற் றொருவன் = சிவபெருமான், மன்னுக = நிலைபெற்று வாழ்க, ஆதல் = பயன், தீங்கனி - இனிய கனி.
ஒருமுறை ஒளவையார் சேர மன்னனிடம் பால் சுரக்கும் ஆடு ஒன்று கேட்க அவன் பொன்னாலான ஆடு ஒன்று கொடுத்தான். சேரனைச் சிறப்பித்து ஒளவையார் இவ்வாறு பாடுகிறார்:
சிரப்பால் மணிமவுலிச் சேரமான் தன்னை
சுரப்பாடு யான்கேட்கப் பொன்னாடொன் றீந்தான்
இரப்பவர் என்பெறினும் கொள்வர் கொடுப்பவர்
தாமறிவர் தன்கொடையின் சீர்.
மவுலி - கிரீடம்; சுரப்பாடு - பால் சுரக்கும் ஆடு; இரப்பவர்-கெஞ்சிக் கேட்பவர்; என்பெறினும் கொள்வர் - இது கொடுத்தாலும் வாங்கிக் கொள்வார்; சீர் - மதிப்பு
எது கற்றலால் வருவது, எது பிறவிக் குணம் என்பதைப் பாட எத்தனித்த ஒளவையார் இவ்வாறு கூறுகிறார்:
சித்திரமும் கைப்பழக்கம்; செந்தமிழும் நாப்பழக்கம்
வைத்ததொரு கல்வி மனப்பழக்கம்; - நித்தம்
நடையும் நடைப்பழக்கம்; நட்பும் தயையும்
கொடையும் பிறவிக் குணம்.
தயையும் = இரக்கமும்; வைத்ததொரு கல்வி = நல்ல கல்வி தேர்ச்சி
அழகைப் பாட வந்த ஔவையார்:
சுரதந் தனில்இளைத்த தோகை,
சுகிர்தவிரதம் தனில்இளைத்த மேனி, -
நிரதம்கொடுத்து இளைத்த தாதா, கொடும்சமரில்
பட்டவடுத்துளைத்த கல்அபிரா மம்.
சுரதந்தனில் - இன்பம் அனுபவித்ததால்; சுகிர்தம் - தவவிரதம்; நிரதம் = ஓயாமல்; தோகை - பெண்; தாதா - வள்ளல்;சமரில் - போரில்; அபிராமம் - அழகு
ஔவையாரின் மூதுறை மற்றும் நல்வழி பாடல்கள் சில:
நீர் அளவே ஆகுமாம் நீர் ஆம்பல் தான்கற்ற
நூல் அளவே ஆகுமாம் நுண் அறிவு - மேலைத்
தவத்து அளவே ஆகுமாம் தான்பெற்ற செல்வம்
குலத்து அளவே ஆகுமாம் குணம் .
நீர் ஆம்பல் - நீரில் வளர்ந்துள்ள ஆம்பல் கொடி;
நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க
நல்லார்சொல் கேட்பதுவும் நன்றே - நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் நன்று.
நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் - தொல் உலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை.
பொசியுமாம் - கசியுமாம்
உடன்பிறந்தார் சுற்றத்தார் என்றிருக்க வேண்டா
உடன்பிறந்தே கொல்லும் வியாதி - உடன் பிறவா
மாமலையில் உள்ள மருந்தே பிணிதீர்க்கும்
அம்மருந்து போல்வாரும் உண்டு.
உடன்பிறந்தாருள்ளே தீமை செய்வோரும் அயலாருள்ளே நன்மை செய்வோரும் உண்டு
சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின் - மேதினியில்
இட்டார் பெரியார் இடாதார் இழிகுலத்தார்
பட்டாங்கில் உள்ள படி.
கொடுத்தவர் உயர்குலத்தினர்; கொடாதவர் இழிகுலத்தினர்; இவ்வகையன்றி வேறு சாதியில்லை .
ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்
இருநாளுக்கு ஏலென்றால் ஏலாய் - ஒருநாளும்
என்நோ(வு) அறியாய் இடும்பைகூர் என்வயிறே
உன்னோடு வாழ்தல் அறிது
இடும்பைகூர்- துன்பம் மிகுந்த; ஒருநாள் உணவை ஒழி என்றால் ஒழியாய்- உணவு கிடையாதபோது உணவை விட்டிரு என்றால் விட்டிராய்; இரு நாளுக்கு ஏல் என்றால் ஏலாய் - உணவு கிடைத்தபோது இரண்டு நாளுக்கு சேர்த்து உண்டுவிடு என்றாலும் ஏற்றுக்கொள்ளாய்;
உண்பது நாழி உடுப்பது நான்குமுழம்
எண்பது கோடி நினைந்து எண்ணுவன - கண்புதைந்த
மாந்தர் குடிவாழ்க்கை மண்ணின் கலம்போலச்
சாந்துணையும் சஞ்சலமே தான்
நாம் உண்ண தேவை நாழி அரிசி சோறு தான், உடுக்க நான்கு முழம், ஆனால் நாம் ஆசைப்படுவது என்பது கோடி விஷயங்கள். அகக்கண் குருடாயிருக்கிற மக்களின் குடிவாழ்க்கையானது மட்கலம்போல இறக்குமளவும் துன்பமாகவே இருக்கிறது.
நன்றென்றும் தீதென்றும் நானென்றும் தானென்றும்
அன்றென்றும் ஆமென்றும் ஆகாதே - நின்றநிலை
தானதாம் தத்துவமாம் சம்பறுத்தார் யாக்கைக்குப்
போனவா தேடும் பொருள்
ஆகாதே நின்ற நிலை - பேதம் செய்யாமல் நின்ற நிலை; தான் அது ஆம் தத்துவம் ஆம் - ஆன்மா அதுவாகுகின்ற உண்மை நிலை ; தேடும் பொருள் - தன்னின் வேறாக மெய்ப்பொருளாகிய கடவுளைத் தேடுவது, சம்பு அறுத்தார் யாக்கைக்குப் போனவா - சம்பு புல்லை அறுத்தவர் அதனைக் கட்டுதற்கு வேறு கயிறு தேடிப் போனது போலும்.
தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்
மூவர் தமிழும் முனிமொழியும் - கோவை
திருவா சகமும் திருமூலர் சொல்லும்
ஒருவா சகமென் றுணர்.
திருக்குறளும், உபநிடதங்களும், தேவாரமும், திருக்கோவையார் திருவாசகங்களும், திருமந்திரமும், ஒரு பொருளையே குறிப்பனவென்று அறிவாயாக.
அவையில் கவிதை பாடி மதிப்புப் பெறுவதற்குப் பிற ஆரவாரத் தகுதிகளும் நிறைய வேண்டியதிருக்கின்றது என்பதைக் கூற வந்த ஒளவையார்:
விரகர் இருவர் புகழ்ந்திட வேண்டும்
விரல்நிரைய மோதிரங்கள் வேண்டும்-அரையதனில்
பஞ்சேனும் பட்டேனும் வேண்டும் அவர்கவிதை
நஞ்சேனும் வேம்பேனும் நன்று!
விரகர் - நலனை எதிர்பார்த்து துதி செய்பவர்; அரை - இடுப்பு
தன்னை கேலி செய்த ஒரு புலவரை ஒளவையார் கேலி செய்து பாடிய பாடல்:
எட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே
மட்டில் பெரியம்மை வாகனமே முட்டமேற்க்
கூரையில்லா வீடே, குலராமன் தூதுவனே
ஆரையடா சொன்னாயது
எட்டேகால் லட்சணமே-அவ லட்சணமே; எமனேறும் பரி - எருமை; மட்டில் பெரியம்மை வாகனமே - மூதேவியின் வாகனமே(கழுத்தை); கூரையில்லா வீடே - குட்டிச் சுவரே; குலராமன் தூதுவனே - ராமனுக்குத் தூது சென்ற ஹனுமானான “குரங்கே”; ஆரையடா சொன்னாயது - யாரைப் பார்த்து இப்படிச் சொன்னாய்.
ஆடு மேய்க்கும் இடையனிடம்(சுட்டப்பழம்) ஏமாந்த ஔவையார் பாடிய பாடல்:
கருங்காலிக் கட்டைக்கு நாணாக் கோடாலி
இருங்கதலித் தண்டுக்கும் நாணும் - பெருங்கானில்
கார்எருமை மேய்க்கின்ற காளைக்குநான் தோற்றது
ஈரிரவு துஞ்சாது என்கண்
கருங்காலிக் கட்டை மிகவும் உறுதியானது. அதை எளிதில் பிளக்கக் கூடிய கோடரி, வாழைத்தண்டை வெட்டும்போது சறுக்கும். அதுபோல நானும் எருமை மாடு மேய்க்கின்ற சிறுவனிடம் தோற்றுவிட்டேன். எனவே இரண்டு இரவுகள் எனக்குத் தூக்கம் வராது.
ஔவையார் அரியது, பெரியது, இனியது, கொடியது பற்றிப் பாடிய பாடல் மிகவும் புகழ்பெற்றது:
அரியது:
அரியது கேட்கின் வரிவடி வேலோய்
அரிதரிது மானிடர் ஆதல் அரிது
மானிடர் ஆயினும் கூன்குருடு செவிடு
பேடு நீங்கிப் பிறத்தல் அரிது
பேடு நீங்கிப் பிறந்த காலையும்
ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது
ஞானமும் கல்வியும் நயந்த காலையும்
தானமும் தவமும் தான்செயல் அரிது
தானமும் தவமும் தான்செய்வ ராயின்
வானவர் நாடு வழிதிறந் திடுமே.
பெரியது:
பெரியது கேட்கின் எரிதவழ் வேலோய்
பெரிது பெரிது புவனம் பெரிது
புவனமோ நான்முகன் படைப்பு
நான்முகன் கரியமால் உதிரத்தில் உதித்தோன்
கரிய மாலோ அலைகடல் துயின்றோன்
அலைகடல் குறுமுனி கலசத்தில் அடக்கம்
கலசமோ புவியிற் சிறுமண்
புவியோ அரவினுக்கு ஒருதலைப் பாரம்
அரவோ உமையவள் ஒருசிறு மோதிரம்
உமையோ இறைவர் பாகத் தொடுக்கம்
இறைவரோ தொண்டர் உள்ளத் தொடுக்கம்
தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே.
இனியது:
இனியது கேட்கின் தனிநெடு வேலோய்
இனிது இனிது ஏகாந்தம் இனிது
அதனினும் இனிது ஆதியைத் தொழுதல்
அதனினும் இனிது அறிவினர்ச் சேர்தல்
அதனினும் இனிது அறிவுள் ளாரைக்
கனவிலும் நனவிலும் காண்பது தானே.
கொடியது:
கொடியது கேட்கின் நெடியவெல் வேலோய்!
கொடிது கொடிது வறுமை கொடிது
அதனினும் கொடிது இளமையில் வறுமை
அதனினும் கொடிது ஆற்றொணாக் கொடுநோய்
அதனினும் கொடிது அன்பிலாப் பெண்டிர்
அதனினும் கொடிது
இன்புற அவர்கையில் உண்பது தானே.
ஔவையார் தனது விநாயகர் அகவலில் யோகம், அதன் நிலைகள், அதன் பயன்கள் ஆகியவை பற்றி விரிவாக எடுத்துரைக்கிறார்.
மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே
ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி
ஆறா தாரத்(து) அங்குச நிலையும்
பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே
மலமொரு மூன்றின் - ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்று மலங்களினால்; மயக்கம் அறுத்தே - தோன்றும் தெளிவின்மையை நீக்கி; ஒன்பது வாயில் - கண் இரண்டு, காது இரண்டு, மூக்குத் துளை இரண்டு, வாய், எருவாய், கருவாய் ஆகிய உடலின் ஒன்பது துவாரங்களையும்; ஒரு மந்திரத்தால் - ஒரு மந்திர உபதேசத்தால்;
ஐம்புலக் கதவை - மாய உலகத்தை உணர்த்தும் ஐந்து புல(, சுவை , ஒளி , ஊறு , ஓசை , நறுமணம்) கதவுகளையும்; அடைப்பதும் காட்டி - மூடுவதை அறிவுறுத்தி; ஆறு ஆதாரத்து - மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், விசுத்தி, அனாகதம், ஆக்ஞை ஆகிய ஆறு ஆதாரங்களை; அங்குச நிலையும் - கடந்த நிலை; பேச்சு உரை அறுத்தே = மெளனத்தில் இருத்தி
குண்டலி யதனிற் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்
காலால் எழுப்பும் கருத்தறி வித்தே
குண்டலி அதனில் - சுழுமுனையின் அடியில் இருக்கும் குண்டலினி சக்தியை
கூடிய அசபை விண்டு எழு மந்திரம் வெளிப்பட உரைத்து - எழுப்பும் செபிக்கப்படாத அசபா மந்திரம் ஒலிக்கும்படி செய்து ; மூண்டு எழு கனலை - கொழுந்து விட்டெறியும் குண்டலினி சக்தியை; காலால் எழுப்பும் - பிராண வாயுவால் எழுப்புகின்ற;
கருத்து அறிவித்தே - வழிமுறைகளைத் தெரிவித்தே
புரியட்ட காயம் புலப்பட எனக்குத்
புரி அட்ட காயம் - ஐந்து தன்மாத்திரைகள்(சுவை , ஒளி , ஊறு , ஓசை , நறுமணம்) மற்றும் 3 அந்தக்கரணங்கள்(மனம் புத்தி அகங்காரம் ) ஆகிய எட்டும் சேர்ந்த நுண்ணுடல்
ஔவையார் ஞான மற்றும் சமய கருத்துக்களை உள்ளடக்கி குறள் வெண்பா வடிவில் ஔவை குறள் என்றொரு நூல் செய்துள்ளார்
பரமாய சத்தியுட் பஞ்சமா பூதந்
தரமாறிற் றோன்றும் பிறப்பு.
பரமாய சக்தி தோற்றுவித்த பஞ்சபூதங்கள் அளவில் மாறுபட்டுக் கலப்பதால் பிறப்பு தோன்றுகின்றது.
ஓசை பரிசமுருவஞ் சுவை நாற்ற
மாசை படுத்து மளறு
ஓசை, பரிசம், பார்வை, சுவை, மணம் ஆகியவை நம் மனதை ஆசையாகிக பந்தத்துக்குட்படுத்தும்.
நிலமைந்து நீர் நான்கு நீடங்கி மூன்றே
யுலவை யிறண்டொன் றுவிண்.
நிலத்தில் ஐந்து தன் மாத்திரைகளும் நீரில் நான்கு தன் மாத்திரைகளும் நெருப்பில் மூன்று தன் மாத்திரைகளும் காற்றில் இரண்டு தன் மாத்திரைகளும் ஆகாயத்தில் ஒலி எனும் ஓர் தன் மாத்திரையும் கொண்டவை.
தொக்குதிரத் தோடூன் மூளைநிண மென்பு
சக்கிலந் தாதுக்க ளேழு.
இந்தச் சரீரமானது, இரத்தம், தசை, மூளை, கொழுப்பு, எலும்பு, சுக்கிலம் ஆகிய ஏழு தாதுகளால் ஆனதாகும்.
உடம்பினா லன்றி யுணர்வுதா னில்லை
யுடம்பினா லுன்னிய தேயாம்.
மனிதனுக்கு உண்டாகும் உணர்வுகள் அவன் உடம்பைச் சேர்ந்தது.
மாசற்ற கொள்கை மனத்தி லடைந்தக்கால்
ஈசனைக் காட்டு முடம்பு.
மனதிலுள்ள குற்றம் நீங்கி தூய்மை செய்தால் இந்த உடலானது ஈசனை உணர்ந்து அறியும்.
வெள்ளிபொன் மேனிய தொக்கும் வினையுடைய
வுள்ளுடம்பி னாய வொளி.
வினையால் கட்டுண்ட ஒளி உள்ளுடம்பின் தோற்றமானது வெள்ளியையும், பொன்னையும் போலக் காட்சியளிக்கும்.
எழுபத் தீராயிர நாடி யவற்றுள்
முழுபத்து நாடி முதல்.
உடலில் எழுபத்து ஈராயிரம் நாடிகள் உள்ளன. அவற்றுள் பத்து நாடிகள் முதன்மையானவை.
நாடி வழக்கமறிந்து செறிந்தடங்கி
நீடொளி காண்ப தறிவு
நாடிகளின் இயல் பரிந்து அதனுடன் ஒன்று கூடி அடங்கி உள்ளொளி காண்பது அறிவு.
பூசனை செய்து புகழ்ந்து மனங்கூர்ந்து
நேசத்தா லீசனைத் தேடு.
பூசை செய்து, புகழ்ந்து பாடி, மனம் குவித்து நேசத்தால் இறைவனைத் தேடு.
வாய்மையாற் பொய்யா மனத்தினால் மாசற்ற
தூய்மையா மீச னருள்.
பொய்மையில்லா வாய்மை நிறைந்த மனதினால் மாசற்ற தூய ஈசன் அருள் கிட்டும்.
எள்ளகத் தெண்ணெ யிருந்ததனை யொக்குமே
உள்ளகத் தீச னொளி.
எள்ளின் உள்ளேயுள்ள எண்ணைப் போன்றது உள்ளிருக்கும் ஈசனொளி.
தனுவொடு தோன்றுமே தானெல்லா மாகி
யணுவதுவாய் நிற்கு மது.
உடலோடு தோன்றி எல்லாமாகி அணுவதுவாகி நிற்கும் ஈசன்
அறம், பொருள், இன்பம், வீடு என்ற மனிதனுக்குத் தேவையான நான்கையும் ஒரே பாடலில் சுருங்கக் கூறியுள்ளார்:
ஈதல் அறம் தீவினைவிட்டு ஈட்டல்பொருள் எஞ்ஞான்றும்
காதல் இருவர் கருத்து ஒருமித்து - ஆதரவு
பட்டதே இன்பம் பரனை நினைந்து இம்மூன்றும்
விட்டதே பேரின்ப வீடு.
ஈதல் - மற்றவர்களுக்குத் தருவது
தீவினைவிட்டு ஈட்டல்பொருள் - தீய வழிகளைத் தவிர்த்து, நல்ல வழியில் சேர்ப்பது பொருள்
எஞ்ஞான்றும் - எப்போதும்
பரனை - இறைவனை
Copyright © 2024 R and R Consultant
Total Hits:267179