கம்பர் மயிலாடுதுறை மாவட்டம் திருவழுந்தூர் (எ) தேரழுந்தூர் என்னும் ஊரில் பிறந்தவர் என்று அறியப்படுகிறது. பொதுவாக மூன்றாம் குலோத்துங்கச் சோழனின் காலமான கி.பி. 12ஆம் நூற்றாண்டே இவருடைய காலம் என்றும், சிலர் இவருடைய காலம் ஒன்பது அல்லது பத்தாம் நூற்றாண்டு என்றும் கருதுகின்றனர். கம்பருடைய தந்தை பெயர் ஆதித்தன் என்று கூறப்படுகிறது.
கம்பரை முதலில் ஆதரித்தவர் சடையப்ப வள்ளல் என்பவர். பின்பே சோழ மன்னன் கம்பரை ஆதரித்து வந்ததாகவும் கூறுகின்றனர்.
கம்பனின் மகன் கவிஞனான அம்பிகாபதி, சோழ மன்னனின் மகளான அமராவதி என்பவளைக் காதலித்ததாகவும், இதன் காரணமாகச் சோழ மன்னன் அம்பிகாபதியைக் கொன்றுவிட்டதாகவும் வரலாறு கூறுகிறது. இதனால் மனமுடைந்த கம்பர் சோழ நாட்டை விட்டு வேறு நாட்டிற்குச் சென்று விட்டதாக அறியப்படுகிறது. அவர் தனது இறுதி நாட்களைச் சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டை அருகே கழித்ததாகச் சான்றுகள் கூறுகின்றன
கவிச்சக்கரவர்த்தி கம்பர், கிபி 1250 ஆம் ஆண்டில் இயற்கை எய்தினார் என்று தெரிகிறது.
"கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்" எனும் பழமொழியும், ‘கவிச்சக்கரவர்த்தி’ மற்றும் "கல்வியிற் பெரியோன் கம்பன்" என்ற பட்டங்களும் கம்பரின் கவித்திறமையைப் பறைசாற்றும்.
கம்பர் சமஸ்கிருதம் மற்றும் தமிழ் மொழியில் கற்றுத் தேர்ந்து சொல்வன்மை கொண்டவராக இருந்தர். அதையே பாரதி “கல்வி சிறந்த தமிழ்நாடு, புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு” எனப் பாடியுள்ளார். அதோடு மட்டுமல்லாமல், கம்பர் ஆழமான கவிதை அனுபவமும், கற்பனை ஆற்றலும், புலமைத் திறனும், உவமான நயமும், சந்த ஞானமும் பெற்று, ‘கம்பராமாயணம்’, ‘சிலையெழுபது’, ‘சடகோபர் அந்தாதி’, ‘சரசுவதி அந்தாதி’, ‘திருக்கை வழக்கம்’, ‘ஏரெழுபது’ மற்றும் ‘மும்மணிக்கோவை’ போன்ற சிறந்த நூல்களைப் படைத்தார். இதில், ‘கம்பராமாயணம்’, தமிழ் இலக்கியத்தில் தலைசிறந்த காவியமாகக் கருதப்படுகிறது.
தமிழில் பாக்களில் வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்று நான்கு வகைகள் உள்ளது போல மூன்று இனங்கள் உள்ளன. அவை - தாழிசை, துறை, விருத்தம் என்பன. கம்பர் விருத்தம் பாடுவதில் மிகவும் வல்லவராகக் கருதப்பட்டார். அதையே பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் “விருத்தமென்னும் ஒண்பாவிற் குயர்கம்பன்” எனக் கூறியுள்ளார்.
தன்னுடைய தமிழ்ப் படைப்புகளால் தனக்கு அழிவு இல்லை என்று எண்ணிய கண்ணதாசன், கம்பனைப் பற்றி “காலமெனும் ஆழியிலும், காற்றுமழை ஊழியிலும் சாகாது கம்பனவன் பாட்டு, அது தலைமுறைக்கு அவன் எழுதி வைத்த சீட்டு” எனக் கூறியுள்ளார்
தன்னை ஆதரித்த சடையப்ப வள்ளலை முடிந்தபோதெல்லாம் தன் கவிதையில் வாழ வைத்தார் கம்பர். ராமர் பட்டாபிஷேகத்தைக் கூறும் பாடலில்
அரியணை அனுமன் தாங்க,
அங்கதன் உடைவாள் ஏந்த,
பரதன் வெண்குடை கவிக்க,
இருவரும் கவரி பற்ற,
விரைசெறி குழலி ஓங்க,
வெண்ணெயூர்ச் சடையன் தங்கள்
மரபுளோர் கொடுக்க வாங்கி,
வசிட்டனே புனைந்தான் மௌலி.
என்பார்.
அரியணை – சிங்காதனம்; இருவரும் கவரி பற்ற - இலக்குவ சத்துருக்கர் இருவரும் சாமரை வீச; விரைசெறி குழலி - மணக்கும் கூந்தலை உடைய; மரபுளோர் – முன்னோர்; வசிட்டனே புனைந்தான் மௌலி - வசிட்ட முனிவர் மகுடம் சூடினார்
Copyright © 2024 R and R Consultant
Total Hits:267177