எங்கள் பிரபல கவிஞர்களின் கதை

பிரபல தமிழ் கவிஞர்கள் தொகுப்பு (Famous Tamil poets collage) / Pirabalamana Tamil Kavignargal thoguppu

திருவள்ளுவர் வரலாறு

திருவள்ளுவரின் இயற்பெயர் மற்றும் அவர் வாழ்ந்த ஊர், இடம் சரியாகத் தெரியவில்லை. கி.மு. முதல் நூற்றாண்டில் தற்போதைய சென்னைக்கு அருகில் உள்ள மயிலாப்பூரில் வாழ்ந்து வந்தார் என்றும், காவிரிப்பாக்கம் அருகில் உள்ள மார்க்செயன் அவரது புதல்வியான வாசுகியை வள்ளுவருக்குத்  திருமணம் செய்து வைத்ததாகவும் கூறப்படுகிறது. தமிழ்நாட்டு அரசு இவர் பிறந்த ஆண்டாக கி.மு 31ஐ அறிவித்து அதன் அடிப்படையில் திருவள்ளுவர் ஆண்டை கணக்கிடுகிறது.

திருவள்ளுவர், திருக்குறளைத் தமிழ்ச்சங்கத்தில் அரங்கேற்றம் செய்ய மிகவும் சிரமப்பட்டதாகவும், முடிவில் ஒளவையாரின் துணையோடு, மதுரையில் அரங்கேற்றியதாகவும் நம்பப்படுகிறது.

திருக்குறள் தவிர மருத்துவம் மற்றும் ஜோதிட நூல்களான ஞான வெட்டியான், பஞ்ச ரத்னம், சுந்தர சேகரம் ஆகியவற்றை எழுதியவர் பெயரும் திருவள்ளுவர் என்று அறியப்படுகிறது.

திருக்குறள் 

திருக்குறள் வேற்றுக் கலப்பில்லாத குறள் வெண்பா ஒன்றாலேயே ஆனது.

அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கில் அறம் நான்கையும் தருவது, பொருள் வீடு நீங்கலாக மூன்றையும் தருவது, இன்பம் இன்பம் ஒன்றையே உணர்த்துவது என்பதோடு வீடு பேற்றை அறத்துனுள் அடக்கி அறத்துப்பால் , பொருட்பால் , காமத்துப்பால் என பிரித்துத் தலைப்பிட்டு நூல் செய்துள்ளார்.


திருக்குறள் முப்பாலினுள் அறத்துப்பாலைப் பாயிரம் - இல்லறவியல் - துறவறவியல் - ஊழ் என நான்கு வகையாகவும், பொருட்பாலை அரசியல் - அமைச்சியல் - பொருளியல் - நட்பியல் - துன்பவியல் - குடியியல் என ஆறு வகையாகவும், காமத்துப்பாலைக் களவியல் - கற்பியல் என இரண்டு வகையாகவும் பிரித்திருக்கின்றனர்; வேறு வகையான பிரிவினைகளும் உண்டு.

அறத்துப்பால்

பாயிரவியல்

கடவுள் வாழ்த்து

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு.

அகரம் ஆகிய முதலை உடையன எழுத்துக்கள் எல்லாம் ; அதுபோல ஆதிபகவன் ஆகிய முதலை உடைத்தது உலகம் . அகரமாகிய நாதம் இயற்கையின் பிறப்பது, அதன் விகாரத்தால் பிறப்பது ஏனைய ஒலிகள். அகரம்போல் முழு இயற்கை அறிவினன் இறை


கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்

நற்றாள் தொழாஅர் எனின்

கற்றதனால் வருகின்ற மயக்க அறிவை தெளிவிக்க இயற்கை அறிவினை தொழுதல் வேண்டும் 


மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்

நிலமிசை நீடுவாழ் வார்.

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு

யாண்டும் இடும்பை இல.

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்

பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க

நெறிநின்றார் நீடுவாழ் வார்.

தொழுதலின் பலன் மட்டுமன்றி,  ஐம்பொறிகளின்(மெய் வாய் கண் மூக்கு செவி) வழியாக வரும் ஐம்புலன்(ஊறு, சுவை, ஒளி, நாற்றம், ஓசை)  இன்பத்தின் கண் செல்லும் மனநெகிழ்ச்சியை அடக்கி பொய் நீங்கிய ஒழுக்க நெறியில் நின்றார் நீடு வாழ்வார்

விருப்பு வெறுப்பு இல்லாத இறையினை சேர்ந்தார்க்கு எத்தகைய சூழ்நிலையிலும் துன்பம் இல்லை என்பதோடு இருள் நிறைந்த இருவினைகளும் அவரை சேராது.

 

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்

மனக்கவலை மாற்றல் அரிது.

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்

பிறவாழி நீந்தல் அரிது.

தனக்கு நிகர் இல்லாத அறம் நிறைத்த சான்றோனாகிய இறையின் திருவடியைச் சேராதவர்க்கு மனத்தின் கண் நிகழும் துன்பங்களை மாற்றுதலும், பொருளாலும் இன்பத்தாலும் வரும் பற்று எனும் துன்பக் கடலை நீந்திக் கரையேறுதலும் அரிது.


கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்

தாளை வணங்காத் தலை.

எண்குணம்(தன்வயத்தனாதல் , தூய உடம்பினனாதல் , இயற்கை உணர்வினனாதல் , முற்றும் உணர்தல் , இயல்பாகவே பாசங்களின் நீங்குதல் , பேரருள் உடைமை, முடிவில் ஆற்றல் உடைமை, வரம்பில் இன்பம் உடைமை) படைத்த இறையின் தாளைத் தலையினால் வணங்காதவர்களுக்குப் புலன்களை நுகர்ந்து வாழப் பொறிகளும், ஊழுக்கு உதவியாகும் கோள்களும் துணை புரிந்தும் பயன் இல்லை.


பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்

இறைவன் அடிசேரா தார்.

இறைவனது திருவடியைச் சேர்ந்தவர் பிறவியாகிய பெருங்கடலை நீந்திக் கரை சேர்வர்; ஏனையோர் 'அதனுள் அழுந்துவர்


இறைவன் என்கிற முதலை உடையது உலகம். கற்றதன் பலன் அவனை வணங்குதல். மன, மொழி, செயல்களால் ஒழுக்க நெறியில் நின்றால் துன்பம் இன்றி இருவினை அண்டாது நீடு வாழலாம். அவனைச் சேராதோர் பொறிகளும் ஊழும் உதவினாலும், மனம், பிறவி மற்றும் உலகப் பற்றால் வரும் துன்பத்திலிருந்து விடுபடுதல் அரிது என்பதை இவ்வதிகாரத்தில் திருவள்ளுவர் எடுத்துரைக்கிறார். இறையை ஆதிபகவன், வாலறிவன், வேண்டுதல் வேண்டாமையிலான், தனக்குவமை இல்லாதான், அந்தணன், எண்குணத்தான் எனப் பல பெயர்களால் சுட்டி அழைத்து இறை இலக்கணம் கூறுகிறார்.

வான்சிறப்பு

வான்நின்று உலகம் வழங்கி வருதலால்

தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.

மழையினால்  உயிர்கள் நிலைபெற்றுத் தொழில்கள் நடந்துவருதலால் அது அமிழ்தம் என்று கொள்ளலாம் . 


துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்

துப்பாய தூஉம் மழை.

தானே உணவாயும், உண்பதற்கு வேறு உணவுகளையும் உருவாக்கித்தருவது மழையே.


விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து

உள்நின்று உடற்றும் பசி.

கடல் நீர் உலகின் கண் விரிந்து கிடந்தும், மழை பொய்த்துவிட்டால் உலகம் பசியால் துன்புறும். 


ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்

வாரி வளங்குன்றிக் கால்.

மேகம் மழையை வாரி வழங்குதலைத் தவிர்த்தால் உழவர் ஏர்கொண்டு உழுதல் தடைப்படும்.


கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே

எடுப்பதூஉம் எல்லாம் மழை.

வேண்டாத பொழுது பெய்து / அதிகமாகப் பெய்து /  பெய்யாமல் கெடுப்பதும், அவ்வாறு கெட்டபேரைத் தான் சரியாய் அளவில் மற்றும் நேரத்தில் பெய்து உய்யச் செய்ய வல்லதும்  மழை.


விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே

பசும்புல் தலைகாண்பு அரிது.

நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி

தான்நல்கா தாகி விடின்.

மழையானது பெய்யாவிடின், இவ்வுலகில் பச்சை புல் நுனியுங்கூடக் காண்பது அரிது, நெடிய கடலும் தனது தன்மை குறையும்


சிறப்பொடு பூசனை செல்லாது வானம்

வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.

தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்

வானம் வழங்கா தெனின்.

நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்

வான்இன்று அமையாது ஒழுக்கு.

மழை பெய்யாதாயின், வானோர்க்கு இவ்வுலகின் மக்களான் செய்யப்படும் சிறப்பு விழாவும் நித்திய பூசனைகளும் நடவாது, விரிந்த உலகின் கண் இல்லறத்தார் கடமையாகிய தானமும் துறவறத்தார் கடமையாகிய ஆன்ம விசாரத் தவமும் உளவாகா, நீரின்றி இவ்வுலகம் நடைபெறாதது போல் ஒழுக்க நெறி உலகின் கண் அமையாது.


மழை உணவை அளித்துப் பசித் துன்பம் நீக்கி அமிழ்தாய் செயல்படுகிறது. கெடுக்கவும் வாழ்விக்கவும் வல்லது மழை. இறை செயலான மழை, இவ்வுலக அறம் பொருள் இன்பத்திற்கு மிகவும் இன்றியமையாதது என்பதை இவ்வதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவதோடு, மழை பெய்யாதாயின், நெடிய கடலும் தனது தன்மை குறையும், வானோர்க்கு இவ்வுலகின் மக்களான் செய்யப்படும் சிறப்பு விழாவும் நித்திய பூசனைகளும் நடவாது, விரிந்த உலகின் கண் இல்லறத்தார் கடமையாகிய தானமும் துறவறத்தார் கடமையாகிய ஆன்ம விசாரத் தவமும் உளவாகா, ஒழுக்க நெறி உலகின் கண் அமையாது என்பனவற்றை இவ்வதிகாரத்தில் திருவள்ளுவர் எடுத்துரைக்கிறார்.

நீத்தார் பெருமை

ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து

வேண்டும் பனுவல் துணிவு.

நூல்கள், ஒழுக்கத்தின் கண்ணே நின்று எல்லாம் துறந்தாரது பெருமையை வேண்டியும் சுட்டியும் நிற்கும்.

   

துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து

இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.

யான் எனது என்கிற இருவகைப் பற்றினையும் விட்டாரது பெருமையை இவ்வளவு என்று எண்ணுதல் இறந்தாரை எண்ணுதல் போன்றது. அளவிட முடியாதது.


இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்

பெருமை பிறங்கிற்று உலகு.

இம்மை மறுமை என்னும் இரண்டினது துன்ப இன்பக் கூறுபாடுகளை ஆராய்ந்து, துறவறத்தைப் பூண்டாரது பெருமையே உலகின் கண் உயர்ந்தது. 


உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்

வரனென்னும் வைப்பிற்கோர் வித்து.

உயிரின் அறிவால் மனக்கருவி கொண்டு ஐம்பொறிகளை ஒழுக்கமுற காத்தல், சிறந்த கதிக்கு ஒரு வித்தாம்.

 

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்

இந்திரனே சாலுங் கரி.

ஐம்பொறி புலன்களை, பற்றும் மனதின் வண்ணம் செல்லாமல் அடக்கித் தவம் மேற்கொள்வோர் வலிமைக்கு மேலுலகத் தலைவன் இந்திரனே சான்று. தெய்வ மகளிரை அனுப்பித் தவமழியச் செய்தான் இந்திரன் என்று புராணங்கள் சான்று காட்டுகின்றன.


செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்

செயற்கரிய செய்கலா தார்.

துறவறத்து அரியன செய்பவரே பெரியர் ஆவார். அவற்றைச் செய்யமாட்டாதார் சிறியர். துறவு ஒன்றால் மட்டும் பெரியர் என்று கொள்ளப்படாது.


சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின்

வகைதெரிவான் கட்டே உலகு.

ஐந்து புலன்களையும் அதனோடு ஒன்றியிருக்கும் தத்துவங்களையும் பகுத்து அறிவானே இவ்உலகின் உண்மை அறிவான்.


நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து

மறைமொழி காட்டி விடும்.

நிறைந்த மொழியினை உடைய துறந்தாரது பெருமையை, அவர் உதிர்க்கும் தவறாது பலிக்கும் சொல் கண்கூடாகக் காட்டும் .


குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி

கணமேயும் காத்தல் அரிது.

எல்லா நற்குணங்களையும் உடைய நீத்தார் கோபம் கணப்பொழுது ஆனாலும் அதை வெளிக்கொணராமல் காத்தலே அவருக்குப் பெருமை.


அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்

செந்தண்மை பூண்டொழுக லான்.

அந்தணர் என்போர் எல்லா உயிர்க்கும் அருளும் கருணையும் செய்வோர். 


ஒழுக்கத்தின் கண்ணே நின்று, யான் எனது என்கிற இருவகைப் பற்றினையும் நீக்கி, இம்மை மறுமை என்னும் இரண்டினது துன்ப இன்பக் கூறுபாடுகளை ஆராய்ந்து துறத்தல் மிகவும் பெருமையுடையது. ஐம்பொறி புலன்களைக் காத்து, அவை சார்ந்த தத்துவங்களை அறிந்து, செய்யும் தவத்தால் அடையும் வலிமைகொண்டு, சொல் பலிக்கும் திறம்பெற்று, செயற்கரிய செய்வோரே நீத்தார். சினம் காப்பதும், கருணையுடன் அருள் பாலிப்பதும் துறந்தாருக்கு  இன்றியமையாதது என்றும் இவ்வதிகாரத்தில் திருவள்ளுவர் எடுத்துரைக்கிறார்.

அறன்வலியுறுத்தல்

சிறப்பு ஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு

ஆக்கம் எவனோ உயிர்க்கு.

உயிர்க்கு இம்மைக்குச் செல்வமும் மறுமைக்கு வீடும் தரவல்லது அறம். 


அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை

மறத்தலின் ஊங்கில்லை கேடு.

ஒருவனுக்கு அறம் செய்தலின் மேற்பட்ட உயர்வும் இல்லை; அதனை மயக்கத்தான் செய்யாமையின் மேற்பட்ட கேடும் இல்லையாம்


ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே

செல்லும்வாய் எல்லாஞ் செயல்.

தத்தமக்கு இயலும் திறத்தான், அறத்தை மன மொழி மெய் இடம் பொருள் ஏவலிடத்து ஒழியாது செய்க.


மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன்

ஆகுல நீர பிற.

ஒழுக்கமாகிய மன மாசின்றி நன்மை பயக்கும் அறம் செயல்வேண்டும். மனமாசுடன் மொழி மெய்களான் செய்யப்படுவன அறமாகா


அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்

இழுக்கா இயன்றது அறம்.

பிறர் ஆக்கத்தால் வரும் பொறாமையும், பொறி புலன்களால் வரும் ஆசையும், அவ்வாசை நிறைவேறாததால் வரும் கோபமும், கோபத்தின் வெளிப்பாடான கடுஞ்சொல்லும் ஆகிய நான்கும் இல்லாமல் செய்வதே அறமாவது.


அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது

பொன்றுங்கால் பொன்றாத் துணை.

அறம் செய்வதைப் பின்னர் பார்த்துக்கொள்ளலாம் என்றில்லாமல், நிலையா உடம்பு நிலைத்திருக்கும் பொழுதே செய்க. செய்த அறம் உயிரின் துணையாய் நின்று நன்மை பயக்கும். 


அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை

பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.

அறப்பயன்  இத்தன்மத்து என்று யாம் எடுத்துரைக்க வேண்டுவதில்லை; பல்லக்கைத் தூக்குபவனோடு மற்று அதன்மேல் ஏறியிருக்கின்றவனுமே சான்று.


வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்

வாழ்நாள் வழியடைக்கும் கல்.

ஒருவன் இடைவிடாமல் நன்மையைச் செய்வானாயின் அது அவன் பிறவிச் சுழற்சியினின்று விடுபடும் வழி காட்டும்.


அறத்தான் வருவதே இன்பம் மற் றெல்லாம்

புறத்த புகழும் இல.

அறம் செய்வதால் வருவதே இன்பமும் புகழும்; மறம் செய்யத் துன்பமே வரும் 


செயற்பால தோரும் அறனே ஒருவற்கு

உயற்பால தோரும் பழி.

ஆராய்ந்து அறிந்து செய்யவேண்டியவை அறங்களே; செய்யத்தகாதது பழிச் செயல்கள்.


அறம் உயர்வும், செல்வமும், வீடும் தரவல்லது. மன மாசின்றி, அழுக்காறு அவா வெகுளி இன்னாச்சொல் தவிர்த்து, காலம் தாழ்த்தாமல், தமக்கு இயன்றவரை, உயிரின் துணையாய் நின்று நன்மை பயக்கும் அறம் செய்தல் வேண்டும். அதன் பயன் கண்கூடாகத் தெரிவதோடு, இன்பமும் புகழும் கொடுத்து பிறவிச் சுழலினின்றும் விடுவிக்கும் என்றும் இவ்வதிகாரத்தில் திருவள்ளுவர் எடுத்துரைக்கிறார்.