சிலப்பதிகாரம் எழுதிய இளங்கோவடிகள் சேர மன்னன் செங்குட்டுவனின் தம்பி ஆவார். இவருடைய தந்தையார் பெயர் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் தாயார் சோழ நாட்டைச்சேர்ந்த நற்சோணை
இவருடைய காலம் கி.பி 2ம் நூற்றாண்டு ஆகும்.
இவர் வாஞ்சி மாநகரில் அரசவையில் தந்தை சேரலாதன் மற்றும் தமையன் செங்குட்டுவனுடன் அமர்ந்திருந்த பொழுது அங்கு வந்த ஒரு குறி சொல்லுபவன், அரசனாக வீற்றிருக்க இலக்கணங்களை உடையவர் இளங்கோவடிகளே என்று கூற, இளங்கோவடிகள் குறி சொல்லுபவன் மீது கோபம் கொண்டு அவன் கூற்றை பொய் என நிரூபித்துக் காட்டுகிறேன் என்று கூறி அந்தக் கணமே துறவு பூண்டார்.
சீத்தலைச்சாத்தனார் கண்ணகியின் கதையைக் கூற அதனைக் காப்பியமாக்கினார் இளங்கோவடிகள். கண்ணகியின் சிலம்பு காரணமாகக் கதை நகர்வதால் 'சிலப்பதிகாரம்' என்று இந்நூல் பெயர்பெற்றது.
சிலப்பதிகாரத்தின் கருப்பொருள்:
அரசியல் பிழைத்தோர்க்கு அறம்கூற்று ஆவதூஉம்
உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும்
ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும் என்பதூஉம்
ஆட்சி செய்வதில் தவறிழைத்தவர்களை அறம் தண்டிக்கும்; ஊழ்வினை, விடாது பற்றித் தொடரும்; கற்புடைப் பெண்டிர் போற்றப்படுவார்கள்.
இளங்கோவடிகள் தமிழ்பா வகைகளில் ஆசிரியப்பாவை(அகவல்பா) சிலப்பதிகாரத்தில் பெரிதும் கையாண்டிருப்பர்.
‘நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணியாரம் படைத்த தமிழ்நாடு, என்பது புரட்சிக்கவி பாரதியாரின்வாக்கு. நெஞ்சையள்ளும் பலபாடல்கள் சிலப்பதிகாரத்தின் கண் உண்டு. காதல் மணம் சொட்டக் கோவலன் கண்ணகியை வருணிக்கும் பாடலை பார்க்கலாம்.
மாசறு பொன்னே வலம்புரி முத்தே
காசறு விரையே கரும்பே தேனே
அரும்பெறற் பாவாய் ஆருயிர் மருந்தே
பெருங்குடி வாணிகன் பெருமட மகளே
மலையிடைப் பிறவா மணியே யென்கோ
அலையிடைப் பிறவா அமிழ்தே யென்கோ
யாழிடைப் பிறவா இசையே யென்கோ
தாழிருங் கூந்தல் தையால் நின்னையென்று
குற்றமற்ற பொன்னே! வலம்புரிச் சங்கிலே பிறந்த முத்து போன்றவளே! குற்றமற்ற மணப்பொருள் தரும் தெய்வ மணமே! இனிமையான கரும்பை போன்றவளே! தேனினும் இனிமையுடையவளே! பெறுவதற்கு அருமையான பாவையே! இன்னுயிர் காக்கும் மருந்தே! பெருங்குடி வணிகனின் பெருமை வாய்ந்த மகளே!
நின்னை ,
மலையிடையிலே பிறவாத மணியே! என்பேனோ
அலையிடையே பிறவாத அமிழ்தமே! என்பேனோ
யாழிடையே பிறவாத இசையே! என்பேனோ
நீண்டு தாழ்ந்த கருங்கூந்தல் உடைய பெண்ணே! நின்னை எவ்வாறு பாராட்டுவேனோ?
சிலப்பதிகார கடலாடு காதையில் கோவலனின் ஊடலும் கூடலும்:
காவேரிப்பூம்பட்டின இந்திரா விழா முடிந்து ஊடல் குறிப்போடிருந்த கோவலனை மகிழ்வித்த மாதவி
ஊடற் கோலமோ டிருந்தோன் உவப்ப;
பத்துத் துவரினும் ஐந்து விரையினும்
முப்பத் திருவகை யோமா லிகையினும்
ஊறின நன்னீர் உரைத்தநெய் வாசம்
நாறிருங் கூந்தல் நலம்பெற ஆட்டி;
பத்துத் துவரினும் - பத்து வகைப்பட்ட துவரினானும், ஐந்து விரையினும் - ஐந்து வகைப்பட்ட விரையினானும், முப்பத்திரு வகை ஓமாலிகையினும் - முப்பத்திரண்டு வகைப்பட்ட ஓமாலிகையானும், ஊறின நல் நீர் - ஊறிக் காயப்பட்ட நல்ல நீராலே, உரைத்த நெய் வாசம் - வாசநெய் தேய்த்த, நாறு இருங் கூந்தல் - மணங்கமழும் கரிய கூந்தலை, நலம் பெற ஆட்டி - நன்மை பெற ஆட்டி ;
பூவந்தி, கடு, நெல்லி, தன்றி, ஆல், அரசு, அத்தி, இத்தி, கருங்காலி, மாந்தளிர் ஆகியவை பத்துவகை துவர்கள். ஐந்து வகை விரைகளாவன கோட்டம், துருக்கம், தகரம், அகில், சந்தனம்.
இலவங்கம், பச்சிலை, கச்சோலம், ஏலம், நாகனம், கொட்டம், நாகம், மதாவரிசி, தக்கோலம், நன்னாரி, வெண்கோட்டம், கத்தூரி, இலாமிச்சம், கண்டில்வெண்ணெய், கடு, நெல்லி, தான்றி, துத்தம்,
வண்ணக்கச்சோலம், அரேணுகம், மாஞ்சி, சயிலேகம், புழுகு, புன்னைநறுந்தாது, புலியுகிர், பூஞ்சரளம், தமாலம், வகுளம், பதுமுகம், நுண்ணேலம், கொடுவேரி, கதிர்நகையா ஆகியவை முப்பதிருவகை ஓமாளிகைகளென சொல்லப்பட்டன.
புகையின் புலர்த்திய பூ மென் கூந்தலை
வகைதொறும் மான்மதக் கொழுஞ் சேறு ஊட்டி;
அலத்தகம் ஊட்டிய அம் செஞ் சீறடி
நலத்தகு மெல் விரல் நல் அணி செறீஇ;
அங்ஙனம் நீராட்டிப் பொலிவினையுடைய புகையால் ஈரம் புலர்த்திய கூந்தலை, மான்மதம் என்னும் கத்தூரி நெய் பூசி மணக்கச் செய்தாள்; செம்பஞ்சிக் குழம்பூட்டிய அழகிய சிவந்த சிறிய கால் அடியின், நன்மை தக்க மெல்லிய விரலிடத்தே நன்றாகிய அணிகளைசப் பூட்டிக்கொண்டாள்;
பரியகம், நூபுரம், பாடகம், சதங்கை,
அரியகம், காலுக்கு அமைவுற அணிந்து;
குறங்குசெறி திரள் குறங்கினில் செறித்து;
பிறங்கிய முத்தரை முப்பத்து-இரு காழ்
நிறம் கிளர் பூந் துகில் நீர்மையின் உடீஇ;
பரியகம், நூபுர சிலம்பு, பாடகம், சதங்கை, அரியகம் என்னுமிவற்றை, கணுக்காலில் பொருத்தமுறும்படி அணிந்து (பரியகம் - காற்சவடி என்றும், அரியகம் - பாதசாலம் என்றும் கூறுவர்); குறங்குசெறி என்னும் அணிகலனைத் தொடையில் காவிக்கொள்ளுமாறு அணிந்துகொண்டாள்; நீல நிறம் விளங்கும் பூத்தொழிலையுடைய உடையை இடையின்மீது உடுத்து, பருமுத்தின் கோவை முப்பத்திரண்டாற் செய்த விரிசிகையென்னும் மேகலை அணியை பூட்டி;
காமர் கண்டிகை-தன்னொடு பின்னிய
தூ மணித் தோள்வளை தோளுக்கு அணிந்து;
மத்தக மணியொடு வயிரம் கட்டிய
சித்திரச் சூடகம், செம் பொன் கைவளை,
பரியகம், வால் வளை, பவழப் பல் வளை,
அரி மயிர் முன்கைக்கு அமைவுற அணிந்து;
காமம் ஊட்டும் கண்டசரமணிந்து அதனோடு மணிகள் கோத்துப் பின்னப்பட்ட தோள்வளை தோளுக்கு அணிந்துகொண்டு; முகப்பிற் கட்டிய மாணிக்கத்தோடே பத்திகளில் வயிரங்களழுத்தப்பட்ட சித்திரத் தொழிலையுடைய சூடகமும், செம்பொன்னாற் செய்த வளையும், நவமணி வளையும், சங்கவளையும், பல பவழ வளைகளும் மெல்லிய மயிரையுடைய முன் கைக்குப் பொருத்தமுற அணிந்துகொண்டாள்
வாளைப் பகு வாய் வணக்கு உறு மோதிரம்,
கேழ் கிளர் செங் கேழ் கிளர் மணி மோதிரம்,
வாங்கு வில் வயிரத்து மரகதத் தாள்செறி,
காந்தள் மெல் விரல் கரப்ப அணிந்து;
வாளைமீன் வாயைப் பிளந்துகொண்டு இருப்பது போல் வளைந்திருக்கும் நெளிவு மோதிரமும், ஒளிமிக்க செந்நிறம் விளங்குகின்ற மாணிக்கம் பதித்த கிளர்மணி மோதிரமும், வில்போல் வயிரம் சூழ்ந்த மரகத தாள்செறியும், காந்தள் மலர்போலும் மெல்லிய விரல்கள் மறையும்படி அணிந்து
சங்கிலி, நுண்-தொடர், பூண் ஞாண், புனைவினை,
அம் கழுத்து அகவயின் ஆரமோடு அணிந்து;
கயிற்கடை ஒழுகிய காமர் தூ மணி
செயத்தகு கோவையின் சிறுபுறம் மறைத்து-ஆங்கு;
ஆரமும், சங்கிலிகளும், முறுக்கு நூல் அணியும், சவடி சரப்பளி முதலாயினவும் கழுத்தின் இடத்தே தாழ அணிந்தாள்; கயல் போல் இருபுறமும் தொங்கும்படி அழகிய தூய முத்து மணிகளைக் கோத்துச் செய்யப்பட்ட கோவை என்னும் அணிகலனைக் கழுத்தின் பின்புறம் பிடரினை மறையும்படி அணிந்துகொண்டாள்.
இந்திர-நீலத்து இடை இடை திரண்ட
சந்திர பாணித் தகை பெறு கடிப்பு இணை
அம் காது அகவயின் அழகுற அணிந்து;
இந்திர நீல முகப்புடன் இடையிடையே திரண்ட சந்திரபாணி வயிரத்தாற் கட்டப்பட்டு அழகு பெற்ற குதம்பையென்னும் அணியை, வடிந்த காதினிடத்தே அழகு மிகும்படி அணிந்து ;
தெய்வ உத்தியொடு, செழு நீர் வலம்புரி,
தொய்யகம், புல்லகம் தொடர்ந்த தலைக்கு-அணி,
மை ஈர் ஓதிக்கு மாண்புற அணிந்து;
தெய்வ(சித்திர) உத்தி, செழுமையான நீரில் பிறந்த வலம்புரி போன்ற நகை, தொய்யக சுட்டி, புல்லகம் (தென்பல்லி, வடபல்லி) ஆகியவற்றை தன் கரிய பெரிய கூந்தலுக்கு அழகுறும்படி அணிந்து;
கூடலும் ஊடலும் கோவலற் களித்துப்
பாடமை சேக்கைப் பள்ளியு ளிருந்தோள்
கூடுதலையும் பின்னர் ஊடுதலையும் கோவலற்கு அளித்துப் படுக்கையில் படுத்துக் களித்திருந்தார்கள் என்று இளங்கோவடிகள் நயம்பட உரைக்கின்றார்.
இளங்கோவடிகள் சமண சமயத்தைச் சார்ந்தவர். தாம் இயற்றிய நூலில் வைணவத் திருமாலையும், சைவக் கொற்றவையையும் போற்றி பின்வருமாறு எழுதியுள்ளார்.
மூ-உலகும் ஈர் அடியான் முறை நிரம்பாவகை முடியத்
தாவிய சேவடி சேப்ப, தம்பியொடும் கான் போந்து,
சோ அரணும் போர் மடிய, தொல் இலங்கை கட்டு அழித்த
சேவகன் சீர் கேளாத செவி என்ன செவியே?
திருமால் சீர் கேளாத செவி என்ன செவியே?
மூன்று உலகங்களையும் இரண்டு அடிகளால் அளந்த சேவடி, தம்பி இலக்குவனோடு காட்டுக்குச் சென்று இலங்கையை அழித்த, அந்தச் சேவகன் புகழைக் கேட்காத செவி என்ன செவி?
பெரியவனை; மாயவனை; பேர் உலகம் எல்லாம்
விரி கமல உந்தி உடை விண்ணவனை; கண்ணும்,
திருவடியும், கையும், திரு வாயும், செய்ய
கரியவனை; காணாத கண் என்ன கண்ணே?
கண் இமைத்துக் காண்பார்-தம் கண் என்ன கண்ணே?
பெரியவனை, மாயவனை, உலகமாக விரிந்துள்ள தாமரை வயிற்றறை உடைய விண்ணவனை, கண், அடி, கை, வாய் நான்கும் சிவந்திருப்பவனை, கரியவனை, காணாத கண் என்ன கண்?
மடம் தாழும் நெஞ்சத்துக் கஞ்சனார் வஞ்சம்
கடந்தானை; நூற்றுவர்பால் நால் திசையும் போற்ற,
படர்ந்து ஆரணம் முழங்க, பஞ்சவர்க்குத் தூது
நடந்தானை; ஏத்தாத நா என்ன நாவே?
‘நாராயணா!’ என்னா நா என்ன நாவே?
அறியாமை தங்கிய உள்ளத்தினையுடைய மாமனாகிய கஞ்சன் செய்த வஞ்சச் செயல்களை வென்றவனும், நான்கு திக்குகளிலும் உள்ளோர் யாவரும் போற்றவும், தொடர்ந்து வந்து வேதங்கள் முழங்கவும், பாண்டவர் பொருட்டுத் துரியோதனாதியரிடம் தூது சென்றோனும் ஆகிய கண்ணனை, போற்றாத நா என்ன நா? நாராயணா என்று கூறத நாவால் என்ன பயன்?
இரண்டு வேறு உருவின், திரண்ட தோள் அவுணன்
தலைமிசை நின்ற தையல்; பலர் தொழும்
அமரி, குமரி, கவுரி, சமரி,
சூலி, நீலி, மால்-அவற்கு இளங்கிளை;
ஐயை, செய்யவள், வெய்ய வாள் தடக்கைப்
பாய் கலைப் பாவை; பைந் தொடிப் பாவை;
ஆய் கலைப் பாவை; அருங்கலப் பாவை;
தமர் தொழ வந்த குமரிக் கோலத்து
அமர் இளங் குமரியும் அருளினள்-
வரி உறு செய்கை வாய்ந்ததால் எனவே.
தலையும் உடலும் இருவேறு வடிவினையுடைய திரண்ட தோளினையுடைய அசுரன் தலையின் மீது நின்றவள்,
இறப்பில்லாதவள், இளமை பொருந்தியவள், கவுர நிறத்தையுடையவள், போரில் வல்லவள், சூலம் ஏந்தியவள், நீல நிறமுடைவள், திருமாலுக்கு இளையவள், எம் தலைவி, தடக் கையில் கொடிய வாளேந்திய நங்கை, பாயும் மான் மீது ஏறி வருபவள், மலைமகள் கலைமகள் மற்றும் திருமகளின் உருவம், யாவரும் விரும்பும் வணங்கத் தோன்றிய கன்னியின் கோலத்தினையுடைய அக் குமரியும், இவள் வரிக்கோலம் வாய்ப்புடையது என அருளினாள்.
Copyright © 2024 R and R Consultant
Total Hits:267242